சிவன் கோயில் கும்பாபிஷேகம் அனுமதி கிடைப்பதில் தாமதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2022 02:11
திருவாடானை: திருவாடானை அருகே மேல்பனையூர் சிவன் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் தயாராக இருந்தும், ஹிந்து அறநிலையத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர். மேல் பனையூர் கிராமத்தில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய அழகி மீனாள் உடனுறை சுந்தரேஸ்வரர் என்ற பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். ஆனால் ஹிந்து அறநிலையத்துறை அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகிறது. கிராம மக்கள் கூறுகையில், மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இக்கோயிலில் பாலாலயம் செய்யவும், விரைவாக திருப்பணிகளை நிறைவு செய்து, கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான செலவுகளை கிராம மக்கள், செல்வந்தர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அனுமதி மட்டும் தான் வழங்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பாலாலயம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோயில் உள் பிரகார சுவர்கள் நாளுக்கு நாள் சிதிலமடைந்து வருகிறது. எனவே பணிகளை துவங்கி கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும், என்றனர்.