பதிவு செய்த நாள்
04
நவ
2022
02:11
திருவொற்றியூர், மணலியில் திருட்டு போன, 150 ஆண்டு கால ஸ்ரீதேவி - பூதேவி சிலையை மீட்ட போலீசார், திருடியவரை கைது செய்தனர்.
சென்னை, மணலி, சி.பி.சி.எல்., நகரில், 300 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீவேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, வழக்கம் போல் பூஜைகள் செய்ய நடையை திறக்க முயன்றபோது, கோவில் இரும்பு கதவு திறந்து கிடந்தது. இது குறித்து தகவலறிந்த, மணலி காவல் ஆய்வாளர் சுந்தர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது, கோவிலினுள் இருந்த, தலா 2 அடி உயரம், 10 கிலோ எடையிலான ஸ்ரீதேவி - பூதேவி சிலைகள் மாயமானது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், மர்ம நபர் ஒருவர், கோவிலினுள் புகுந்து சிலை திருடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சந்தேகத்தின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்ற யுவராஜ், 55, என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தன் மகள் திருமணம், 7ம் தேதி நடைபெற இருப்பதால், அதற்கு பணத்தேவை இருந்தது. அதன் காரணமாக, சுவாமி சிலைகளை திருடியதாக ஒப்புக் கொண்டார். மேலும், திருடிய சிலைகளை, மணலி, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி பின்புறம் உள்ள மைதானத்தில் மறைத்து வைத்திருப்பதாக வாக்கு மூலம் அளித்தார். அதன்படி, மறைத்து வைத்திருந்த, 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி - பூதேவி சிலைகளை, போலீசார் பத்திரமாக மீட்டனர். அந்தோணிராஜ் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.