பதிவு செய்த நாள்
04
நவ
2022
04:11
கோவை: போத்தனூர் கோணவாய்க்கால் பாளையத்தில் உள்ள ஆதி பழனி ஆண்டவர் கோவில் மகா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழா வரும் 7ம் தேதி நடக்கிறது.
கோணவாய்க்கால் பாளையத்தில் உள்ள ஆயிர வருடம் பழமை வாய்ந்த முருகப்பெருமான் கோவில், கடந்த, 2003ம் ஆண்டு, செல்வ முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது முருகப்பெருமான் தனது தாய் தந்தையுடன் அருள் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் கோவில் வளாகத்தில் வேதநாயகி உடனமர் தேவபுரீஸ்வரர் சன்னதிகளை புதிதாக கட்டியும், பழைய சன்னதிகளை புதுப்பித்து, கோபுர கலசங்களுக்கு வண்ணம் தீட்டி மகா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் மடாலயம் கூனம் பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்குகிறார். நாளை, மங்கல இசை, விநாயகர் வழிபாடு, இறைவனின் அனுமதி பெறும் நிகழ்வுகளோடு துவங்கி, வரும், 7ம் தேதி காலை, 7:05 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.