பதிவு செய்த நாள்
18
நவ
2022
03:11
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை கடந்த 200-ஆண்டுகளுக்கு முன்னர், நிலம்பூர் கோவிலகம் மற்றும் மைசூர் மகாராணி ஆட்சி புரிந்து வந்தனர். இதில் நெல்லியாலம் என்ற இடத்தை தலைமை இடமாகக் கொண்டு, ராணி போரம்மாள் ஆட்சி செய்து வந்தார்.
நெல்லியாலத்தில் கோட்டை அமைத்து, அதனை ஒட்டிய குன்றில்கடவு, காக்கா தூக்கி அம்பலம் என்ற இடத்தில் சிவன் கோவிலை கட்டி, வழிபாடு நடத்தி வந்துள்ளார். 83 சென்ட் நிலத்தில் கோவில் இருந்த நிலையில், ராணியின் வாரிசுதாரர்கள் இங்கிருந்து சென்று விட்டனர். அதனை அடுத்து கோவிலில் இருந்த விலை உயர்ந்த விக்கிரகங்கள் மற்றும் செப்பு தகடுகளால் ஆன மேற்கூரைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள இந்து சமுதாய மக்கள் அவ்வப்போது, கோவிலுக்கு சென்று சிறு பூஜைகளை நடத்தி வந்துள்ளனர். அதற்கு கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த வழிபாடுகளும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவன் கோவில் மீட்பு குழு எனும் கமிட்டி அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. கோவில் நிலத்தை நில அளவை செய்து அக்கிரமிப்பு நிலங்களை மீட்டு தர, கமிட்டி சார்பில் பந்தலூர் தாசில்தாரிடம் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று கமிட்டி தலைவர் நவநீத ராஜா, செயலாளர் தங்கம், பொருளாளர் கங்காதரன் ,துணைத் தலைவர் தர்மன் ,துணைச் செயலாளர் புஷ்கரன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நில அளவை செய்யப்பட்டது. தேவாலா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வி.ஏ.ஓ. கர்ணன், நில அளவையார்கள் மனோஜ் குமார், செந்தில் கண்ணன், உதவியாளர் ராமராஜன் ஆகியோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். அதில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தேயிலை, காபி, குறுமிளகு உள்ளிட்ட விவசாயிகள் செய்திருந்தது தெரிய வந்தது. நிலத்தை மீட்டு கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆக்கிரப்புகளை அகற்றக் கூடாது என ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக விண்ணப்பித்து நில அளவை செய்து பிரச்சனைக்கு தீர்வு காண போலீசார் அறிவுறுத்தினார்கள்.