பதிவு செய்த நாள்
18
நவ
2022
03:11
சென்னை: கார்த்திகை மாதம் நடக்கும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் அய்யப்பன் கோயில் நடை நேற்று (நவ., 16) திறக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் குருசாமி முன்னிலையில், மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயிலில், கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை ஒரு மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல காலத்துக்காக, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நேற்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்தார். அடுத்து, 18ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின், 18 படிகளுக்கு கீழே நின்று கொண்டிருந்த புதிய மேல்சாந்திகள் சபரிமலை ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புறம் ஹரிகரன் நம்பூதிரி ஆகியோரை கை பிடித்து அழைத்து வந்து, சன்னதி முன் அவர்களுக்கு திருநீறு வழங்கினார். மாலை 6:30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சன்னதி முன்பு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரிக்கு அபிஷேகம் செய்து அய்யப்பன் மூலமந்திரத்தை சொல்லித் தந்து சன்னதிக்கு அழைத்துச் சென்றார். மாளிகைப்புறம் கோவில் முன்புறம் நடைபெற்ற சடங்கில் ஹரிகரன் நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி சன்னதிக்குள் அழைத்து சென்றார்.
மண்டலகாலம் துவக்கம்: இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் ஆரம்பமானது. தந்திரி கண்டரரு ராஜீவரரு மண்டலகால நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார். நாளை முதல், தினமும் அதிகாலை 4:30 மணி முதல் 11:30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும்.