பழநி: பழநியில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் பழநி கோயில் பஞ்சாமிர்தத்தை வாங்கி சென்றனர்.
பழநி கோயிலுக்கு சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதாலும், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் முருக பக்தர்களின் வருகையாலும் கூட்டம் அதிகரித்துள்ளது. பழநி கோயில் பஞ்சாமிர்தம் பிரசித்தி பெற்றது. எனவே வெளி மாநில மாவட்ட பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் தேவஸ்தான பஞ்சாமிர்த கடைகளில் பஞ்சாமிர்த விற்பனை அதிகரித்துள்ளது. பழநி கோயிலில் அரை கிலோ எடை உடைய ரூ.35 மற்றும் ரூ.40க்கு இரண்டு விதமான பாட்டில் மற்றும் டின்களில் பஞ்சாமிர்தம் கிடைக்கிறது. பழநி மலைக்கோயில் பஞ்சாமிர்த கடைகளில் நாள் ஒன்றுக்கு 1.40 லட்சம் பஞ்சாமிர்த பாட்டில்கள் விற்பனை ஆயின. இதற்கு தகுந்தவாறு கோயில் நிர்வாகம் வின்ச் ஸ்டேஷன் அருகே உள்ள பஞ்சாமிர்த உற்பத்தி நிலையத்தில் இரவு பகலாக உற்பத்தியை அதிகரித்துள்ளது. தேவையான நேரங்களில் கடைகளுக்கு மற்றும் மலைக்கோவிலுக்கு பஞ்சாமிர்த பெட்டிகள், மெட்டீரியல் ரோப் கார், வின்ச் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. விற்பனையை கோயில் நிர்வாகம் கண்காணித்து வருகிறது.