3வது ஏறு தழுவுதல் கல்வெட்டு கிருஷ்ணகிரி அருகே கிடைத்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2022 12:12
கிருஷ்ணகிரி: மூன்றாவது ஏறு தழுவுதல் கல்வெட்டு, கிருஷ்ணகிரி அருகே சிக்கியது. ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு, பண்டைய தமிழர்களால் மிகவும் போற்றப்பட்டு வந்ததை சங்க இலக்கியங்கள் சிறப்பித்து பேசுகின்றன. அதுகுறித்த நடுகல் தடயங்கள், சேலம் மாவட்டம் ஆத்துார், கருமந்துறையிலும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம், புதுார் அருகேயும் கிடைத்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் அகரத்தில், மூன்றாவது ஏறுதழுவுதல் நடுகல் சிக்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள அகரம் என்ற ஊரில், தென்னந்தோப்பில் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. 300 ஆண்டு பழமையான கல்வெட்டில், காளையானது பக்கவாட்டில் முன்னங்காலை துாக்கி ஓடுவது போல் உள்ளது. அதற்கு பின் காளையை அடக்க முற்படும் வீரன், திமிலை இறுக பற்றிக்கொண்டு, காளை முன்னங்காலில் தனது கால்களை பின்னிக்கொண்டு தொங்குகிறான். இதனால் காளையின் நாக்கு வெளியே தொங்குகிறது. ஏறு தழுவுதல் என்னும் சொல்லுக்கு ஏற்ப இந்த நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.