மயிலாடுதுறை : திருநகரி கோவிலில் திருமங்கை ஆழ்வார் அவதார நாள் விழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரி கிராமத்தில் கல்யாண ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இது திருமங்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலமாக திகழ்கிறது. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமான தினமான இன்று திருமங்கை ஆழ்வார் அவதார நாள் உற்சவ விழா நடைபெற்றது. அவதார நாளை முன்னிட்டு திருமங்கை ஆழ்வார், குமுதவல்லி நாச்சியாருடன், கல்யாண ரங்கநாதர், அமிர்தகடவல்லி தாயார், ஆண்டாள் சன்னதிகளுக்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்து தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருமங்கை ஆழ்வார் சிறிய மர திருத்தேரில் எழுந்தருள நான்கு வீதிகளையும் வலம் வந்த தேர் நிலையை அடைந்தது. திருநகரி கோவிலுக்கு பின்னால் உள்ள தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனமும், சாற்று முறையும் நடைபெற்றன. திருமங்கை ஆழ்வார் அவதார நாள் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை ஸ்ரீதர், பத்மநாதன் பட்டாச்சாரியார்கள் செய்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அன்பரசன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.