கச்சிராயபாளையம்: நீலமங்கலம் வெண்ணியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 40 கி.மீ., தூரம் நடந்து சென்று குடி அழைத்தல் வைபவம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏரிக்கரையில் நூற்றாண்டு பெருமை பெற்ற வெண்ணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழங்கால முறைப்படி பூஜைகள் செய்து வருகின்றனர். இக்கோவில் தேர் திருவிழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.திருவிழா துவக்கத்தையொட்டி மரபுப்படி குதிரையுடன் கோவிலுக்கு சென்று குடி அழைத்தல் வைபவம் நேற்று நடத்தினர். நீலமங்கலத்திலிருந்து கோமுகி அணை அருகே உள்ள தாகப்பாடி அம்மன் கோவிலுக்கு, நேற்று காலை நடந்து சென்றனர். அங்கு குதிரைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் குதிரையுடன் பூ கரகம் எடுத்துக் கொண்டு தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் குதிரையின் வேகத்திற்கு ஏற்றவாறு ஊர்வலமாக வெண்ணியம்மன் கோவிலை வந்தடைந்தனர். வெண்ணியம்மனுக்கு இரவு சிறப்பு பூஜைகள் நடந்தது. மொத்தம் 40 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து சென்று வைபவம் நடத்தினர். அய்யனார், வெண்ணியம்மன் தேர் திருவிழா வரும் 12ம் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.