பதிவு செய்த நாள்
25
டிச
2022
01:12
அவிநாசி: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில் உழவாரப்பணி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
ஹிந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றத்தின் நிறுவனர் கணேசன் தலைமையில் 300 சிவனடியார்கள் பிரதி மாதம் 4ம் ஞாயிற்றுக்கிழமை தோறும் திருக்கோயில்கள் தூய்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடுதல், கூட்டு பிரார்த்தனை மற்றும் உழவாரப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க திருமுறை ஈசனை சுமந்து திருமுறைகள் பாடி விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சிவனடியார்கள் பேரணி சென்றனர்.
இந்நிகழ்ச்சி குறித்து நிறுவனர் கணேசன் கூறுகையில் கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றத்தில் இதுவரை 246 கோவில்களில், 300ம் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப் பணிகள் மேற்கொண்டுள்ளனர்.தற்போது கொங்கு நாட்டு தளங்களில் உழவாரப்பணிகள் மேற்கொள்ள கோவை பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து துவங்கியுள்ளோம்.அதனைத் தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில்,திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்,வெஞ்ச மாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவ ஸ்தலங்களில் உழவாரப்பணிகள் மேற்கொள்ள உள்ளோம்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநின்றவூர், வேலூர், ராணிப்பேட்டை,அம்பத்தூர், உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.