பதிவு செய்த நாள்
25
டிச
2022
08:12
திருச்சி:கொரோனா பரவல் அதிகரித்தால், கோவில் விழாக்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், ஜன., 2ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். விழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: கோவில் திருவிழாக்களின் போது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சொர்க்க வாசல் திறப்புக்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டரால் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏகாதசி திருவிழாவில், 17 லட்சம் பக்தர்கள் கூடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு நாளான ஜன., 2ம் தேதி மட்டும், இரண்டு லட்சம் பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், குடிநீர் மற்றும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில், 3,000 போலீசார் ஈடுபட உள்ளனர். கொரோனா பரவல் குறித்து, முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.- கோவில்களில் விழாக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.