திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் 33 ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. நேற்று காலை 9:00 மணி அளவில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் இருந்து பள்ளபச்சேரி சக்தி விநாயகர் கோவில் வரை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உடலில் வண்ணப் பொடிஈகளை பூசியவாறு ஆடிப்பாடி சரணகோஷம் முழங்கியவாறு வந்தனர். அருகே உள்ள குளத்தில் புனித நீராடிய பின் கோயிலில் பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது. ஐயப்ப குருசாமி சாத்தையா, ஜெயமுருகன், பள்ளபச்சேரி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
* உத்தரகோசமங்கை மங்களநாத சாமி கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் நடந்த மண்டல பூஜையில் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் படத்திற்கு படி பூஜை நடந்தது. முதல் படியில் வைக்கப்பட்ட தீப ஆரத்தி பின்னர் படிப்படியாக அதுவே தானாக 18 படிகளிலும் சூடத்தில் பற்றி கொண்ட அதிசய நிகழ்வு அரங்கேறியது. பக்தர்கள் சரண கோஷம் முழங்கினர். குருசாமி சண்முகநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
* உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் 20ஆம் ஆண்டு மண்டல பூஜை முன்னிட்டு குருசாமி முருகானந்தம் அம்பலம் தலைமையில் விழா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* சாயல்குடி மீனாம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலில் தர்ம சாஸ்தா சன்னதியில் மண்டல பூஜை விழா நடந்தது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடினர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை ரவிச்சந்திர குருக்கள் செய்திருந்தார்.