வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2022 10:12
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் இன்று பல ஆயிரக் கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோவில் நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக உள்ளது. செல்வ முத்துக்குமாரசுவாமி, 18 சித்தர்களின் சித்த மருத்துவத்தின் அதிபதியான தன்வந்திரி தனித்தனி சன்னதிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு, இங்கு வழங்கப்படும் திருச்சாந்து உருண்டை எனும் பிரசாதத்தை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமடையும். இக்கோவிலில் செவ்வாய்க் கிழமை அன்று அகல் விளக்கு தீபம் ஏற்றுவதால் கல்வி, தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை என்பதால் செவ்வாய்க்கிழமையான இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் தையல்நாயகி அம்மனுக்கு மாவிளக்கு போட்டும், பஞ்சமூர்த்திகளுக்கு அகல் விளக்குகள் ஏற்றியும், அடி பிரதட்சணம் செய்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.