பதிவு செய்த நாள்
28
டிச
2022
10:12
தொண்டாமுத்தூர்: கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று துவங்கியது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கிய கோவிலாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி, ஆனி நாற்று நடவு உற்சவம், பங்குனி உத்திர திருவிழா, மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா, இன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மார்கழி பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ஸ்னபன பூஜைகள், மாணிக்கவாசகருக்கு அபிஷேகம், கலசபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து காலை, 9:45 மணிக்கு, ஸ்ரீ சிவகாமி உடனமர் நடராஜ பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும், காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, திருவெம்பாவை விண்ணப்பம் செய்யப்பட்டு, நடராஜ பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும் மகா தீபாராதனை நடந்தது. அதன்பின் மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. இன்று முதல் தொடர்ந்து 9 நாட்களுக்கு, காலையும், மாலையும் திருவெம்பாவை விண்ணப்பம் மற்றும் மாணிக்கவாசகர் திருவீதி உலா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் மார்கழி திருவாதிரை உற்சவத்தின், பத்தாம் நாளான வரும் ஜனவரி 6ம் தேதி, ஆருத்ரா தரிசன காட்சி நடக்கிறது. திருவாதிரை உற்சவம் துவக்கத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.