பதிவு செய்த நாள்
30
டிச
2022
09:12
ஓராண்டாக முடங்கி கிடந்த கொரோனா தொற்று உருமாறி மீண்டும் பீதியை கிளப்புவதால், புத்தாண்டு தினத்தில், கோவில்களில் பக்தர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க, அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயமாகி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்குகிறது. புத்தாண்டு அன்று கோவில்களின் நடை நள்ளிரவில் திறக்க எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த சில ஆண்டுகளாக வழக்கம் போல அதிகாலையில்தான் திறக்கப்படுகின்றன. புத்தாண்டை முன்னிட்டு, பிரதான கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. அனைத்து கோவில்களிலும், புத்தாண்டு தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கூடுவர். மீண்டும் உலகை மிரட்ட ஆரம்பித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து கோவில்களிலும் கட்டுப்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புத்தாண்டு அன்று கோவில்களில் குவியும் பக்தர்கள் அனைவரும், முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என, அறநிலையத் துறை அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. - நமது நிருபர்-