பதிவு செய்த நாள்
30
டிச
2022
09:12
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், பழங்கால கல்வெட்டுகளை கொண்டதுமான சோழர் காலத்து சதுர் விமான கோபுர கட்டமைப்பில் கட்டப்பட்ட ஆலயம் சிதிலமடைந்த நிலையில் புதுப்பிக்கும் பணியில் கிராம மக்கள், தொன்மையான ஆலயத்தை சீரமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டையில், கி.பி.4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகியநாதர் எனப்படும் கல்யாண சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. சோழர் காலத்தில், செங்கற்களால் கட்டப்பட்ட 274 கோயில்களுக்கு சோழப்பேரரசி செம்பியன் மாதேவி கருங்கற்களால் திருப்பணி செய்து வைத்தார். அதில், விடுபட்ட செங்கற்களாலான கோயில்கள் இன்றும் சோழர்கள் காலத்து, செங்கற்கள் கட்டடக் கலைக்குச் சான்றாக காட்சியளிக்கின்றன. அதில் ஒன்றான இந்தக் கோயிலில், கருவறை மட்டும் கருங்கற்கலால் கட்டப்பட்டுள்ளது. கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கருவறை விமானம் ஆகியவை செங்கல் மற்றும் சுதை சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில், மகாபாரத காலத்தில், பீமன் புருஷாமிருகத்துடன் சண்டையிட்ட இடம் எனக் கூறப்படுகிறது. இதற்கான சிற்பமும் கோயிலில் காணப்படுகிறது. பழங்கால கல்வெட்டுகள் கொண்ட இந்தக் கோயிலின் விமானம், சோழர் காலத்து சதுர்விமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நாயக்க மன்னர் காலத்தில் எழுப்பப்பட்ட கட்டடங்களும் இந்தக் கோயிலில் உள்ளன.
சூரிய பகவான், தனக்கு ஏற்பட்ட குன்மநோய் நீங்குவதற்கு இங்குள்ள அம்பாளை வழிபாடு செய்து, நோய் நீங்கப் பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகிறது. இச்சிறப்பை உணர்த்தும் வகையில், எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில், இக்கோயிலில் 7அடி உயர சூரியன் சிலை, அம்பாள் சன்னிதிக்கு நேர் எதிரே அமையப் பெற்றுள்ளது. கையில் தாளத்துடன், திருஞானசம்பந்தரின் சிற்பம் காணப்படுகிறது. விக்கிரமசோழன் அல்லது கோச்செங்கட்சோழன் இந்தக் கோயிலை நிர்மாணம் செய்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கோயிலின் பக்கவாட்டில், தாமரை வடிவில் தூண்கள், மேற்கூரையின் கொடுங்கை அமைப்புகள் சுட்டச் செங்கற்களால் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது பண்டைய தமிழர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது. தொன்மைவாய்ந்த இந்தக் கோயில் தற்போது சிதிலமடைந்து, கோபுரங்கள், பக்கவாட்டுச் சுவர்கள், சுற்றுப் பிராகார மண்டபங்கள் இடிந்து காணப்படுகின்றன. கோயிலின் கருவறைக்கு வலது புறம், சிறிய நுழைவுவாயில் ஒன்று துணியினால் மூடப்பட்டுள்ளது. உள்ளே சுரங்கப் பாதை மற்றும் நிலவறை தென்படுகின்றன. விஷ வண்டுகள் மற்றும் பூச்சிகள் வெளியே வராமல் இருக்க சுரங்கப் பாதை மூடப்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தொன்மை வாய்ந்த இக்கோயிலை புனரமைத்து திருப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம் என்பதால் சுண்ணாம்பு, கடுக்காய் மணல் கொண்டு பழைய கட்டுமான பாணியில் புதுப்பிக்க வேண்டும் வேண்டும் என்பதால் செலவு பல மடங்கு அதிகரிக்கும் தற்போது கிராமத்தினர் மட்டுமே செலவு செய்து வரும் நிலையில் பெரும் செலவு ஏற்படும் என்பதால் தொன்மையான ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்ய தமிழக அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் விரும்புகின்றனர்.