புதுச்சேரி: ஏம்பலத்தில் கோவில் குளத்தை பராமரிக்காததால், கழிவுநீர் குட்டையாக சுருங்கி விட்டது. ஏம்பலத்தில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இங்கு நடக்கும் தெப்பல் உற்சவம் பிரசித்திப் பெற்றது. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், இக்குளத்தில் புனித நீராடுவது வழக்கம். இதற்கிடையில், கடந்த 40 ஆண்டுகளாக குளத்தை சரிவர தூர்வாரி பராமரிக்காமல் விட்டதால், தற்போது குளம் தூர்ந்துபோய் குட்டையாக மாறி விட்டது.மேலும், இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், இக்குளத்திலேயே விடப்படுகிறது. குப்பைகளை கொட்டியும் குளத்தை மூடி வருகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் குட்டையாக மாறிவிட்ட, ஏம்பலம் பெருமாள் கோவில் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.