பதிவு செய்த நாள்
04
செப்
2012
11:09
பெசன்ட் நகர்: நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால், உங்கள் முன்னேற்றத்தை, கர்த்தர் பார்த்துக் கொள்வார். உழைப்பவர்களிடம் தான் கடவுள் இருப்பார் என்று, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய உழைப்பாளர் விழாவில், நற்கருணை சபையின், தென்னிந்திய சபை தலைவர் ராஜ் பிரசங்கம் செய்தார். பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 40ம் ஆண்டு திருவிழா நடக்கிறது. ஆறாம் நாள் விழாவான, நேற்று காலை, வேந்தர் சார்லஸ் குமாரின் திருப்பலி அரங்கேறியது. மாலை, செபமாலை, நவநாள் செபம், கூட்டுத்திருப்பலி ஆகியவை நடந்தன. உழைப்பாளர்களின் குடும்பத்தார் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆலயத்தின் பங்குத் தந்தையும், அதிபருமான பிரான்சிஸ் மைக்கேல் சிறப்பு ஜெபம் செய்தார்.
விசுவாசமும் உழைப்பும்: நேற்றைய விழாவின் சிறப்பு விருந்தினராக நற்கருணை சபையின் தென்னிந்திய சபை தலைவர் ராஜ் கலந்து கொண்டு, உழைப்பாளர் விழாவில் பேசியதாவது: விசுவாசத்தோடு சேர்ந்த உழைப்பு வேண்டும். நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட வேண்டும் என, ஆண்டவர் கூறியுள்ளார். நாம் இறைவனை சார்ந்து வாழ வேண்டும். குறைந்த பணி செய்து, நிறைந்த செல்வம் எதிர்பார்க்கக் கூடாது. உழைப்பவர்களை மதிக்க வேண்டும். எவன் ஒருவன் சிரத்தையுடன் உழைக்கிறானோ அவனிடம் கர்த்தர் இருக்கிறார். பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என, அவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் செல்லமாக வளர்க்கின்ற பெற்றோர் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, தவறான பாதையை காட்டுகின்றனர் என அர்த்தம்.
பெற்றோரின் கடமை: ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகளுக்கு கஷ்டம், உழைப்பு, நேர்மை, தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை உணர்த்த வேண்டும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால், உங்கள் முன்னேற்றத்தை கர்த்தர் பார்த்துக் கொள்வார். உழைப்பவர்களுக்குத்தான் தனது தேவையும், அடுத்தவர் தேவையும் தெரியும். இவ்வாறு ராஜ் பேசினார். இதையடுத்து, அன்னை மாதா, இயேசு கிறிஸ்து ஆகியோரது, திருத்தேர் பவனி நடந்தது. விழாவின், ஏழாம் நாளான இன்று, இளைஞர்கள் விழா நடக்கிறது.