பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மார்கழி 27 ஆம் நாளான இன்று கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாளின் அக்கார வடிசில் வைபவம் நடந்தது.
மார்கழி மாதம் என்றாலே விஷ்ணு, சிவன் உள்ளிட்ட பகவான்களுக்கு வேண்டிய நாளாகும். இந்த மாதத்தில் ஆண்டாள், பெருமாளை அடைய வேண்டி பாவை நோன்பு நோற்றுள்ளார். இதன்படி மார்கழி 27 அன்று கூடாரவல்லி நாளில் ஸ்ரீரங்கம் பெருமாள் உடன் ஆண்டாள் ஐக்கியமானார். இந்நிலையில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகனுக்கு 100 தடாவில் வெண்ணையும், 100 தடாவில் அக்கார வடிசிலும் (சர்க்கரை பொங்கல்) சமர்ப்பிப்பதாக வேண்டி இருந்தார். அந்நாளில் ஆண்டாள் தனது வேண்டுதலை நிறைவேற்றினாரோ, இல்லையோ என்ற வகையில், ராமானுஜர், அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாளுக்கு அந்த வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாளிடம், உங்களது வேண்டுதலை அடியேன் நிறைவேற்றினேன், என தெரிவித்தார். அப்போது ஆண்டாள் ராமானுஜரை அண்ணா என அழைத்தார். தொடர்ந்து ராமானுஜருக்கு கோவில் அண்ணன் என்ற பெயர் ஏற்பட்டது. இதன்படி இன்று பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இந்த வைபவம் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு ராமானுஜர், கோயிலில் ஆடி வீதி வலம் வந்தார். தொடர்ந்து திருப்பாவை உள்ளிட்ட ஆண்டாள் பாசுரங்கள் பாடப்பட்டன. அப்போது 100 வட்டிலில் வெண்ணெய் மற்றும் 100 வட்டிலில் அக்கார வடிவில் நெய்வேத்தியம் நடந்தது. பின்னர் சிறப்பு தீப ஆராதனைகளுக்கு பின்னர் பிரசாதங்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பாவை கோஷ்டியினர் மற்றும் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.