பதிவு செய்த நாள்
17
ஜன
2023
09:01
தொண்டாமுத்தூர்: ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன் மாட்டு பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவை ஈஷா யோகா மையம் சார்பில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், மாட்டுப்பொங்கல் விழா ஆதியோகி முன் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், மலைவாழ் மக்கள், சுற்று வட்டார கிராம மக்கள், விவசாயிகள், ஈஷா தன்னார்வலர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, மண்பானையில் பொங்கல் வைத்தனர். தனைத்தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, நவதானியங்கள் உள்ளிட்டவைகள் அர்ப்பணிக்கப்பட்டன. இவ்விழாவில், அழிந்து வரும் நம் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், நாட்டு மாடுகள் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில், காங்கேயம், காங்கிரிஜ், கிர், ஓங்கோல், தார்பார்க்கர், தொண்டை மாடு உள்ளிட்ட, 23 வகையான பாரம்பரிய நாட்டு மாடுகள், கண்காட்சியை அலங்கரித்தது. உலகின் மிக குட்டையான நாட்டு மாடு முதல் மிக உயரமான நாட்டு மாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி முன், இன்றும் நாட்டு மாடுகள் கண்காட்சி நடைபெறுகிறது.