பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கனுப்பாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2023 09:01
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாட்டுப்பொங்கல் தினத்தை ஒட்டி கனுப்பாரி உற்சவ விழா நடந்தது. தை 1 பொங்கல் விழாவை தொடர்ந்து, நேற்று பெருமாள் கோயிலில் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன்படி சுந்தரராஜ பெருமாள் நவரத்தின கல் பதித்த கிரீடம் தாங்கி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
இந்நிலையில் பெருமாள், கிருஷ்ண அவதாரத்தில் பசு மாடுகளை பராமரிக்கும் வகையில் அவற்றை பாதுகாத்தார். தொடர்ந்து இந்நிகழ்வை குறிக்கும் வகையில் பெருமாள் குதிரை வாகனத்தில் காலை 10:30 மணிக்கு புஷ்ப தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து ரதவீதி உட்பட முக்கிய தெருக்களில் வலம் வந்த பெருமாள் மாலை 5:30 மணிக்கு திருக்கோயிலை அடைந்தார். அப்போது வீடுகளில் பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். கோயிலில் பாகவதர் கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாடினர்.. இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.