பதிவு செய்த நாள்
17
ஜன
2023
04:01
உசிலம்பட்டி: பயங்கர ஆயுதம் என ஆங்கிலேயர்களால் தடைசெய்யப்பட்டாலும் வளரி ஆயுதம் நடுகற்கள் வாயிலாகவும், சாமிக்கு காணிக்கை என்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. உசிலம்பட்டிக்கு அருகே விக்கப்பநாயக்கனூருக்கு வடக்கில் நாகமலைத் தொடரில், ஒரு குன்றின் மீது உள்ள பரமசிவன் கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் வளரியுடன் சூடிய நடுகல்லை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், அருண்குமார், சோலைபாலு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இந்நடுகல் நான்கரை அடி உயரமும், சுமார் மூன்றரை அடி அகலத்திலும் உள்ள நடுகல்லில் புடைப்புச் சிற்பங்களாக ஆண் மற்றும் பெண் உருவங்கள் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளது ஆணின் இடது கையில் வளரி எனப்படும் வளைத்தடியும் வலது கையில் வாளை உயர்த்திய நிலையிலும், பெண் சிற்பத்தின் இடது கையில் மலர் வைத்திருப்பது போலவும், இடது கை தொங்கிய நிலையிலும் காட்டப்பட்டுள்ளது. ஆண் சிற்பத்தில் தலையின் இடது புறம் கொண்டையும், பெண் சிற்பத்தில் தலைக்கு மேலே கொண்டையும் மற்றும் சிற்பங்கள் மேல் ஆடையின்றி இடைக்கு கீழே ஆடையுடனும் நேர்த்தியான அணிகலன்களும் காணப்படுகிறது. இச்சிற்பம் தோற்றத்தின் அடிப்படையில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
பட்டவுன் சாமிக்கு வளரி காணிக்கை: அதுபோல, கருமாத்தூர் அருகே கோவிலாங்குளத்தில் உள்ள பட்டவுன் சுவாமி கோவிலில் மாட்டுப்பொங்கல் தினத்தில் கோவிலுக்கு காணிக்கையாக வளரி, ஆளுயர சைத்தடி ஆகியவை செலுத்தும் பழக்கம் உள்ளது. குலதெய்வ கோயில்களில் சாமி பெட்டிகளில் வளரி வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. பட்டவன் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் தை முதல் நாளில் கோவிலாங்குளம் கிராமத்தில் இருந்து சோழவந்தானுக்கு நடந்து சென்று வாழைத்தார்கள் வாங்கி தலைச்சுமையாக எடுத்து வந்து குவியலாக வைக்கின்றனர். இதன் முன்பாக பொங்கல் வைத்து, நேர்த்திக்கடனாக வளரி, கைத்தடி ஆகியவற்றை இன்றளவும் காணிக்கையாக வழங்குகின்றனர். பூசாரி கைத்தடி மற்றும் வளரியை ஏந்தி அருள்வாக்கு சொல்கிறார்.
காந்திராஜன், தொல்லியல் ஆய்வாளர்: உசிலம்பட்டி வளரி ஆயுதத்துடன் நடுகற்கள் கருமாத்தூர், இ.கோட்டைப்பட்டி, கள்ளப்பட்டி போன்ற இடங்களில் காணப்படுகிறது. புள்ளிமான்கோம்பைக்கு அருகே உள்ள மூணாண்டிபட்டியில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியத்திலும் வளரி காட்டப்பட்டுள்ளது. வளரி ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா பழங்குடிகள் மத்தியில் மட்டுமே பயன்பாட்டில் உள்ள ஆயுதமாகும். இதே போல் அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த நபருக்கு ஆப்பிரிக்கா பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் காணப்படும் மரபணு ஒத்துபோவதாக ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் மதுரை, புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் பயன்பாட்டில் இருந்துள்ளது. வளரி ஆயுதத்தை ஆங்கிலேயர்கள் தடை செய்யப்பட்ட ஆயதமாக அறிவித்து மக்கள் பயன்படுத்த தடை விதித்தனர், இதனால் இப்பகுதி மக்களிடம் இருந்து வளரியின் பயன்பாடு காணமல் போனது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் கோவிலாங்குளம் கிராமத்தில் இன்றளவும் சாமிக்கு நேர்த்திக்கடனாக வளரியை கொடுத்து வருவதாலும், வேறு எங்கும் கிடைக்காத வகையில் வளரியுடன் கூடிய நடுகற்கள் இந்தபகுதியில் கிடைப்பதும் மக்கள் பயன்பாட்டில் இருந்து மறையாமல் உள்ளது என்றார்.