பதிவு செய்த நாள்
17
ஜன
2023
10:01
பல்லடம்: பல்லடம் அடுத்த, சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், 63; விவசாயி. இவரிடம், 20க்கும் மேற்பட்ட காங்கயம் இன நாட்டு மாடுகள் உள்ளன. மாட்டு பொங்கல் தினமான நேற்று, மத்தளங்கள் முழங்க இவரது தோட்டத்தில் மாட்டு பொங்கல் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.
இது குறித்து ஈஸ்வரன் கூறுகையில், மாடுகளை பட்டியாபுரம் தாயாக வழிபட்டு வருகிவோம். அதிலும் நாட்டு மாடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அன்றாடம் உழவுக்கு செல்லும் முன் மாடுகளை வழிபட்ட பின் தான் பணிகளை ஆரம்பிப்போம். மாட்டு பொங்கல் நாளில், மாடுகளை குளிக்க வைத்து, பொட்டு வைத்து, மாலை சூடி அலங்கரிப்போம் தொடர்ந்து, தெப்பக்குளம் கட்டி, அதில் பால், தண்ணீர் ஊற்றி, குளத்தின் மறுபுறம் முடக்கத்தான், ஆத்திமாறு, ஊஞ்சமாறு ஆகியவற்றை கயிறாக்கி கட்டுவோம். மாட்டு பொங்கலான இன்று (நேற்று) உழவுக்கு பயன்படும் அனைத்து உபகரணங்களையும் வைத்து பூஜிப்போம். மாடுகளுக்கு பொங்கல் படைத்து, கரும்பு, முருக்கு உள்ளிட்டவற்றை மாட்டின் கொம்புகளில் கட்டுவோம். தெப்பக்குளம் தாண்டி செல்லும் மாடுகள், முடக்கத்தான் கொடியை அறுத்துக்கொண்டு தெப்பக்குளத்தின் மறுபக்கம் செல்லவேண்டும். அவ்வாறு சென்றால்தான் விவசாய நிலத்தின் முடக்கு நீங்கியதாக அர்த்தம். இதையடுத்து, இறைவனை வழிபட்டு அனைவரும் பொங்கல் உண்போம். முப்பாட்டன், பாட்டன், தந்தை என, வழிவழியாக இந்த மாட்டு பொங்கல் வழிபாட்டை செய்து வருகிறோம். இதனால், விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் என்றார்.