பதிவு செய்த நாள்
17
ஜன
2023
10:01
பெரம்பலுார்: அரியலுார் அருகே, ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கிராமத்தின் பொதுவான ஒரு இடத்தில் கூடி, பொங்கல் வைத்து ஆடு மாடுகளுக்கு படையெடுத்து மாட்டுப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் விவசாயம் செய்வதுடன், ஆடு, மாடுகளை வளர்த்து பிழைத்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் ஆடு மாடு வளர்க்கும் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரே இடத்தில் பொங்கல் வைத்து, ஆடு, மாடுகளுக்கு படையலிட்டு, அவைகளுக்கு ஊட்டி மாட்டுப்பொங்கலை கொண்டாடுவது என முடிவு செய்தனர். இதன்படி, மாட்டுப் பொங்கல் பண்டிகையான நேற்று ஊரில் பொதுவான இடமான மாரியம்மன் கோவில் முன்பு அனைவரும் குடும்பத்துடன் பொங்கல் வைப்பதற்கான பானை, பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் மற்றும் பூஜை பொருட்களுடன் நேற்று கூடினர். அங்கேயே தனித்தனியாக பொங்கல் வைத்தனர். அப்போது பொங்கல் பொங்கிய போது பொங்கலோ பொங்கல் என குலவை சத்தமிட்டனர். முன்னதாக, ஆடு, மாடுகளை குளிப்பாட்டி, கலர் போட்டு வைத்து, புது கயிறு மற்றும் மாலை அணிவித்து அலங்கரித்தனர். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கொத்து, கரும்பு உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு பூஜை பொருட்களுடன் ஆடு மாடுகளுக்கு தீபாராதனை காண்பித்து, ஆடு மற்றும் மாடுகளை வணங்கி கும்பிட்டனர். பின்னர், மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி, அவைகளுக்கு பொங்கல் ஊட்டி விவசாயிகள் அனைவரும் ஒன்று , பொங்கலோ பொங்கல் என குலவை சத்தமிட்டனர். அவர்களின் பொங்கலோ பொங்கல் குலவை சத்தம் வானதிரும் வகையில் இருந்தது. கிராமத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி, பொங்கலிட்டு, மாட்டுப் பொங்கலை கொண்டாடியது வெகு விமர்சையாக இருந்ததுடன், விவசாயிகளின் ஒற்றுமையை போற்றுவதாக இருந்தது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி மாட்டுப்பொங்கல் பண்டிகையை கொண்டாடியது அரியலுார் மாவட்டத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது