திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் வரும் 19ம் தேதி ஆற்று திருவிழா நடைபெறும் என தாசில்தார் கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் தைத்திங்கள் 5ம் நாள் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தடை என்பதால் ஆற்றுத் திருவிழாவுக்கு அரசு தடை விதித்திருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத சூழலில், வரும் 19ம் தேதி வழக்கம் போல் ஆற்று திருவிழா நடைபெறும் என தாசில்தார் கண்ணன் தெரிவித்துள்ளார். 19ம் தேதி காலை திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர், வீரப்பாண்டி அதுல்யநாதேஸ்வரர், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரிக்கு பின் தனித்தனி பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவை காண மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.