பதிவு செய்த நாள்
17
ஜன
2023
10:01
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே சிறுமலை மலைப்பகுதி கிராம மக்கள் மாட்டுப் பொங்கல் ஆன நேற்று தாங்கள் வளர்க்கும் குதிரைகளுக்கு குதிரை பொங்கல் வைத்து கொண்டாடினர்.
திண்டுக்கல் அருகே சிறுமலை மலைப்பகுதி உள்ளது. இங்கு பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை, உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களில் உள்ள வனபகுதியில் சாலை வசதி கிடையாது. இங்கு உள்ள விளை நிலங்களில் மலை வாழை, எலுமிச்சை, சவ்சவ், அவரை, காப்பி, ஏலக்காய், பலாப்பழம் போன்றவற்றை பயிர் செய்யப்படுகிறது. மலைப்பகுதியில் விளையக் கூடிய காய்கறி மற்றும் பழங்களை ஊருக்கு எடுத்துட்டு வர வேண்டும் என்றால் குதிரையின் முதுகில் மூட்டையாக கட்டி தான் எடுத்து வேண்டும். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 2 குதிரையாவது வைத்திருப்பார்கள். இதனையடுத்து கிராமங்களிலிருந்து சரக்கு வேன் மற்றும் பேருந்து மூலமாக திண்டுக்கல்லிற்கு கொண்டு வந்து காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழர் திருநாளான நேற்று மாட்டு பொங்கல் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. அதேபோல் சிறுமலையில் மலைப்பகுதியில் குதிரை பொங்கல் கொண்டாடுவது வழக்கம். தங்களுக்கு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்க கூடிய குதிரைகளை தெய்வமாக கருதி அதனை குளிப்பாட்டி அதற்கு கலர் பொடிகளை கொண்டு உடல் முழுவதும் பொட்டு வைத்தும், அலங்காரம் செய்து மாலை அணிவித்து சலங்கை கட்டி பொங்கல் வைத்து படைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அனைத்து குதிரைகளையும் ஒன்று சேர்த்து ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.நேற்று குதிரைக்கு முழு ஓய்வு அளித்து அதனை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டு விட்டனர். சிறுமலை மலைப்பகுதி விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குதிரையை தெய்வமாக வழிபட்டு குதிரை பொங்கலை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.