பழநி கோவிலில் வழக்கம் போல கும்பாபிஷேகம் உயர் நீதிமன்றம் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2023 08:01
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்களை பயன்படுத்த கோரி தாக்கலான வழக்கில், வழக்கம் போல கும்பாபிஷேகம் நடத்தலாம். அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கரூர் தான்தோன்றிமலை வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 27ல் நடக்கிறது. தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகன் கோவிலின் குடமுழுக்கை முழுமையாக தமிழில் மந்திரங்களை கூறி நடத்துவதே சிறப்பாகும். உயர் நீதிமன்றம்,வரும் காலங்களில் அனைத்து கோயில் கும்பாபிஷேகங்களிலும் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையான தமிழ் மந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என 2021ல் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்கள் ஒரு மூலையில் மட்டுமே மந்திரங்களை ஓதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்; சம வாய்ப்பு வழங்கவில்லை.
பழநி கோயில் குடமுழுக்கில் யாகசாலை, கருவறை, கோபுர விமானத்தில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்களை பயன்படுத்தக்கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழ் ராஜேந்திரன் கூறியிருந்தார். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டதாவது: ராஜகோபுரம், விமானத்தில் தலா இரண்டு ஓதுவார்கள் தமிழில் திருமுறை பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் தமிழிலும், கோவிலின் பழக்க வழக்கம், ஆகம விதிகளுக்கு உட்பட்டும் நடக்கும். ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு கூறப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது. பழநி கோவிலில் வழக்கம் போல் குடமுழுக்கு நடத்தலாம். அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர் பிப்., 20ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது, இவ்வாறு உத்தரவிட்டார்.