திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2023 08:01
விழுப்புரம்: திருக்கோவிலூரில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கீழையூர், வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர், ஏரிக்கரைமூலை இரட்டை விநாயகர், வீரபாண்டி அதுல்யநாதேஸ்வரர் சுவாமிகள் காலை 9:30 மணிக்கு தாரை தப்பட்டை முழங்க ஆஸ்தானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பாடாகி தென்பெண்ணையாற்றில் எழுந்தருளினர். ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் நிறைவடைந்து, தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்துள்ளி, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடைக்காலம் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக விழாவிற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று நடந்த ஆற்றுத் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து திருவிழா கடைகளில் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். 70க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.