அன்னூர்: அன்னூர் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நிறைவு பெற்றது.
அன்னூரில் 300 ஆண்டுகள் பழமையான கூத்தாண்டவர் கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். கொரோனா காரணமாக இம்முறை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10ம் தேதி கம்பம் நடுதலுடன் திருவிழா துவங்கியது. தினமும் இரவு கம்பம் சுற்றி ஆடுதலும், பூவோடு எடுத்தலும் நடந்தது. கடந்த 19ம் தேதி அரவான், பொங்கி அம்மன் மற்றும் அனுமன் சுவாமிகள் கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், கிராம மக்கள் மாவிளக்கு எடுத்து வருதலும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு துவங்கி நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சி நடந்தது. அரவான் சரித்திரம் வாசிக்கப்பட்டது, நேற்று அன்னூரில் முக்கிய வீதிகளின் வழியாக அரவான் மற்றும் அனுமன் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் அரவானை வரவேற்றனர். இதையடுத்து அரவான் கட்டுமரம் சேர்த்தலும், களப்பலி கொடுத்தலும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இதை தொடர்ந்து மறுபூஜை நடந்தது.