மாதம் மும்மாரி மழை பெய்ய எந்த தேவாரப்பாடலைப் பாராயணம் செய்ய வேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2012 03:09
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருப்புன்கூர் என்னும் சிவத்தலம் உள்ளது. இக்கோயிலுக்குரிய நிபந்தங்களில் முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. மழை பெய்ய12 வேலி நிலமும்(84ஏக்கர்) மழை நிற்க 12 வேலி நிலமும் காணிக்கையாக ஒரு அடியார் இக்கோயிலுக்கு எழுதி வைத்துள்ளார். இத்தலம் குறித்து சுந்தரர் பாடியருளிய தேவாரத்தில் இக்குறிப்பு காணப்படுகிறது. வையகமுற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலந்தருகோம் உய்யக்கொள்க மற்று எங்களை என்ன ஒளிகொள் வெண்முகிலாயப் பரந்து எங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்தும் பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு அருளும் செய்கைக் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே என்பது அத்தேவாரப் பாடல். மழை பெய்யவும் நிற்கவும் இங்கு சிறப்பு வழிபாடும் வழக்கில் இருக்கிறது. அதற்கு திருப்புன்கூர் பதிகம் முழுவதும் பாராயணம் செய்யுங்கள். குறைந்த பட்சம் இப்பாடலை மட்டுமாவது ஓதி வாருங்கள். மாதம் மும்மாரி பெய்து வளம் சுரக்கும்.