பதிவு செய்த நாள்
27
ஜன
2023
02:01
மேட்டுப்பாளையம்: தைப்பூசத்தை முன்னிட்டு, சுப்ரமணியர் கோவிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என, திருமுருக பக்தர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடைசியாக, 2011ம் ஆண்டு தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள், பொதுமக்கள் கோவிலில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து பிப்., மாதம் பாலாலயம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த, 11 ஆண்டுகளாக கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மண்டல பூஜையும், கடந்த மாதம் சூரசம்ஹாரம் விழாவும் நடந்தது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது கோவிலின் தேர் சக்கரங்கள் கழற்றி போடப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு, தைப்பூச தேரோட்டம், நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது குறித்து திருமுருக பக்தர்கள் வழிபாட்டு குழுவினர் கூறுகையில்," பழமையான சுப்ரமணியர் கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்று, பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. கோவிலில் கும்பாபிஷேகம், சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. அதனால் இந்தாண்டு தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என, பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், தேரின் சக்கரங்களை கழற்றி, ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த ஆண்டு தைப்பூச தேரோட்டத்தை நடத்த, ஹிந்து சமயம் அறநிலைத்துறை நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.