அன்னூர்: தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் தான் முருகன் கோவில்கள் அதிகமாக உள்ளன என பேரூர் ஆதீனம் தெரிவித்தார். அன்னூர் அருகே சாலையூரில் பழமையான பழனி ஆண்டவர் கோவில் பல கோடி ரூபாய் செலவில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. நேற்று காலை விநாயகர், கதிர்காம வேல், சித்தர்கள் உள்ளிட்ட மூர்த்தி களுக்கு எண் வகை மருந்து சாத்தப்பட்டது. சிரவை ஆதீன கலைஞர்களின் சண்முக மாலை கச்சேரி நடந்தது. இதில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேசுகையில், "தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் தான் அதிக அளவில் முருகன் கோவில்கள் உள்ளன. கோவில் திருப்பணி செய்வதற்கு கொடுப்பினை இருந்தால் மட்டுமே செய்ய முடியும். கோவிலுக்கு வருவதற்கும் நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். பொருளால், உடல் உழைப்பால், மனதால் கோவில் திருப்பணி செய்வோரின் சந்ததி நல்ல முறையில் நீடுடி வாழும்," என்றார். நேற்று இரவு பழனியாண்டவர் பெருமானை ஆதார பீடத்தில் வைத்து எண் வகை மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 6:30 மணிக்கு விநாயகர், கதிர்காம வேல், சித்தர்கள் கோவிலுக்கும், காலை 9:45 மணிக்கு விமான கலசத்துக்கும், பழனி ஆண்டவருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவும், மாலையில் வள்ளி கும்மியாட்டமும் நடக்கிறது.