ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2023 11:02
திருநெல்வேலி: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் நேற்று தெப்பத் திருவிழா விமரிசையாக நடந்தது. இன்றும் 2வது நாளாக நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி கோவில் முதல் தலமாக விளங்குகிறது. கோவில் அருகில் உள்ள தெப்பத்தில் திருவிழா சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடக்கிறது. இதற்காக தெப்பத்தை சீரமைக்கும் பணிகள் நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு நடந்த தெப்பத் திருவிழாவில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி, நத்தம் வரகுண மங்கை எம்இடர்கடிவான் சுவாமி, திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் ஆகிய மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளினர். பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆழ்வார்திருநகரி ஜீயர் எம்பெருமானார், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தாசில்தார் ராதாகிருஷ்ணன், கள்ளபிரான் கோவில் செயல் அலுவலர் கோவல மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டாவது நாளாக இன்று இரவு நடக்கும் தெப்பத் திருவிழாவில் கள்ளபிரான் சுவாமிகள் மோகினி வேடத்தில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், ஹிந்து அறநிலைய துறையினர் மேற்கொள்கின்றனர்.