கோவில்களில் பலத்த பாதுகாப்பு: இந்து முன்னணி வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2023 11:02
கோவை : நெல்லையப்பர் கோவிலில் பர்தா அணிந்த பெண் நுழைந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழக கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: தைப்பூச விழா அன்று காலை, 11:30 மணிக்கு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலினுள் கருப்பு நிற பர்தா அணிந்த நபர் நுழைந்தார். மூலஸ்தானம் வரை சென்று சுவாமி தரிசனம் செய்தார். பல்வேறு இடங்களை படம் பிடித்துள்ளார். கோவில் பணியாளர்கள் அவரை தடுக்கவில்லை; போட்டோ எடுத்தது குறித்து கேள்வி எழுப்பவில்லை. தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்றதும், பர்தா அணிந்த பெண் நிற்காமல் ஓட்டம் பிடித்தார்.
அவர் எதற்காக வந்தார் என்பது மர்மமாக உள்ளது. கோவில் நிர்வாகம் தவறை மறைக்கப்பார்க்கிறது. பாதுகாப்பு நிறைந்த நெல்லையப்பர் கோவிலிலேயே இந்த நிலை என்றால் மற்ற கோவில்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இது கோவில்களுக்கு ஒரு சூழ்நிலையில் ஆபத்தை ஏற்படுத்தகூடும். லுங்கி, டவுசர் அணிந்து வரக்கூடாது என்று அறிவிப்பு வைக்கப்பட்ட கோவில்களில் பர்தா மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறது. இந்துக்கள் வழிபாடு செய்யும் அனைத்து கோவில்களிலும் கொடிமரம் முன்பு ஆகமவிதிப்படி இந்துக்கள் அல்லாதோர் செல்லக்கூடாது என்ற அறிவிப்பு இருக்கும். தற்போது இது பல கோவில்களில் அகற்றப்பட்டுள்ளது, இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மீண்டும் இதுபோல் அறிவிப்புகளை வைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தெய்வங்களை வழிபட வருவோர், இந்து தெய்வ நம்பிக்கையோடு, இந்து கலாசாரப்படி வழிபாடு செய்வதே முறையாக இருக்கும். நெல்லையப்பர் கோவில் சம்பவத்தை படிப்பினையாக கொண்டு தமிழக கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.