பதிவு செய்த நாள்
20
பிப்
2023
07:02
ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவம் விசாகப்பட்டினத்திலுள்ள ஸ்ரீமடம் முகாமில் நடந்தது. விஜயயாத்திரையின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் ஜெயந்தி நாள் விழா மங்கள வாத்தியத்துடன் தொடங்கியது. முதல் தரிசனத்திற்காக (விஸ்வரூப தரிசனம்) ஆவலுடன் காத்திருந்த பக்தர்களுக்கு ஸ்ரீ சந்திரமவுலீஸ்வர சுவாமி சந்நதியில் நடந்த கோ பூஜையை தரிசனம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.
ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீ சந்திரமவுலீஸ்வர பூஜை செய்வதற்கு முன் பக்தர்கள் அளித்த மலர் மாலைகள், மஞ்சள், ஏலக்காய் , மலர் கிரீடம் மற்றும் பிற காணிக்கைகளை ஏற்றுக்கொண்டார். பூஜைக்குப்பின் பிப்.,14 முதல், மஹாருத்ரம் மற்றும் ஷத சண்டியாகங்கள் நடை பெற்று வரும் யாக சாலைக்குச் சென்று பக்தர்களுக்கு பூஜை தீர்த்த பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் ஹோமங்கள் நடை பெற்றன. வேத மந்திரங்கள் முழங்க ஹோம கலசங்களில் இருந்து புனிதப்படுத்தப்பட்ட நீரைக் கொண்டு ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மாவாரு தேவஸ்தானம் மற்றும் தஞ்சா வூர் ஸ்ரீபங்காரு காமாட்சி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்து ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி பிரசாதம், திருப்பதி தேவஸ்தான தலைவர் ஸ்ரீசுப்பா ரெ ட்டி மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்களால் வழங்கப்பட்டது. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்கோயில், ஸ்ரீரங்கம் கோயில், ஸ்ரீ உச்சிப்பிள்ளையார்- மலைக்கோட்டை , ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களின் பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு ஸ்வர்ண பாத பூஜை செய்து மகாசிவராத்திரி பூஜைகளை நடத்தினார். மாலையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தானவித்வான் ஸ்ரீ மாண்டலின் ராஜேஷ் மற்றும் உடன் வந்த கலைஞர்கள் குழுவினரால் நாத சமர்ப்பணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.