மண்டைக்காடு பிரச்னையில் சுமூக தீர்வு இருதரப்பும் இணைந்து சமயமாநாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2023 08:02
நாகர்கோவில்: மண்டைக்காடு கொடை விழாவின் போது ைஹந்தவ சேவா சங்கமும், அறநிலையத்துறையும் இணைந்து ஹிந்து சமய மாநாடு நடத்தும் என்று அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஐந்து மணி நேர பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. இதனால் மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலை தணிந்தது.
பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வரும் பக்தர்கள் கடல் குளிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்னையில் 1980–ல் துப்பாக்கிச்சூடு நடைபெற்று பலர் இறந்தனர். முதல்வர் எம்.ஜி.ஆர். நேரடியாக மண்டைக்காடு வந்து சமரசம் செய்து அமைதி ஏற்படுத்தினர். அதன் பின்னர் ஆறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் கொடை விழா நடைபெற்று வருகிறது. கொடை விழாவையொட்டி ைஹந்தவ சேவா சங்கம் பத்து நாட்களும் தேவசம்போர்டு இடத்தில் பந்தல் அமைத்து சமய மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. கடந்த 85 ஆண்டுகளாக நடத்தி வரும் இந்த நிகழ்ச்சியை தேவசம்போர்டு தடை செய்ததோடு, அறநிலையத்துறை நேரடியாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பா.ஜ., இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பிலும் நோட்டீஸ் பிரிண்ட் செய்யப்பட்டது. மண்டைக்காட்டை மீண்டும் கலவர பூமியாக மாற்றி விடக்கூடாது என்று ஹிந்து தர்ம வித்யா பீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி பேட்டி அளித்தார். இதை தி.மு.க. மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மண்டைக்காடு வந்தார். இங்கு மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பின்னர் நாகர்கோவில் விருந்தினர் மாளிகையில் சமரச பேச்சு தொடங்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் ஐந்து மணி நேர பேச்சுவார்த்தை, தனித்தனி ஆலோசனைக்கு பின்னர் ைஹந்த சேவா சங்கமும், அறநிலையத்துறையும் இணைந்து சமய மாநாட்டை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பொன் ராதகிருஷ்ணன், ஏற்கெனவே தயாரித்த நிகழ்ச்சி நிரலில் சிறுசிறு மாற்றங்களுடன் சமயமாநாடு நடைபெறும் என்று கூறினார். இதே கருத்தை அமைச்சர் சேகர்பாபுவும் உறுதி செய்தார். இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா இந்து சமய மாநாடு முந்தைய காலம் போல் நடைபெற வேண்டி இந்திய இயக்கங்கள் சார்பில் வீதிகளில் அகல் விளக்கேந்தி பிரார்த்தனை நடைபெற்றது.