திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2023 12:02
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் பிரமோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி பகுதியில் பிரசித்தி பெற்ற, 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக விளங்கி வரும் மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பிரமோற்சவம் கடந்த 15ம் தேதி துவங்கியது. தினசரி பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார். பிரமோற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழாவான கருட சேவை சிறப்பாக நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை, சப்பர வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். மாலையில் யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து நேற்று ஏழாம் நாள் தேர்த் திருவிழா நடந்தது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் 8:30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். காலை 9:01 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் சென்ற தெருக்களில் பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10:20 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. இன்று காலையில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.