வாலாஜாபாத் : காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த கொசப்பட்டு கிராமத்தில், விஜய நகர காலத்தைச்சேர்ந்த நில தானம் குறித்த தமிழ் எழுத்து கல்வெட்டு தேடும் பணியில், கருங்கல்லால் ஆன காளி சிலை கண்டெடுக்கப்பட்டது.
இந்த சிலையின் தலையில், கிரீடமும், தலைக்கு பின்னால் நெருப்பு ஜூவாலையும் காண முடிகிறது. இரு காதுகளில் குண்டலமும், உருமிய கண்களையும் காண முடிகின்றன. கழுத்து மற்றும் மார்பில் நேர்த்தியான அணிகலன்களை காணலாம். இதுதவிர, இடுப்புக்கு கீழே ஆடையுடன், இடது காலை மடக்கி அமர்ந்த நிலையில் இருக்கிறார். வலது கால் பாதம் லேசாக திரும்பிய நிலையில், காண முடிகிறது. வலது கையில் திரிசூலமும், இடது கையில் குங்குமச் சிமிழும் காண முடிகிறது. இது, ஏறக்குறைய 16ம் நுாற்றாண்டைச்சேர்ந்த காளி சிலை என தொல்லியல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் கல்வெட்டு உதவியாளர் நாகராஜன், பிரசன்னா ஆகியோர் உறுதியளித்துள்ளனர். வாலாஜாபாத் வட்டார ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் இதை தெரிவித்தார்.