மதுரை மீனாட்சி கோயிலுக்கு உணவு பாதுகாப்பு துறை சான்று
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2023 11:02
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுத்தமான சுகாதாரமான அன்னக் கூடத்திற்கான மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை சான்று வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சுகாதாரமான உணவு கூடத்திற்கான சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதை அடுத்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் கோயில் அன்னதான கூடத்தின் உள் கட்டமைப்பு ஆய்வு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை, உணவு பாதுகாப்பு துறை சார்பில் பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது.
உணவை சுத்தமாக தயாரிப்பது, சமையலறையை சுகாதாரமாக பராமரிப்பது குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அன்னதான கூடத்தில் இருந்து உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. கோயிலில் ஆய்வுக்கு முன்பும் ஆய்வுக்குப் பின்பும் அன்னதான, சமையல்கூடத்தின் போட்டோக்கள் எடுத்து மத்திய உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பப்பட்டது. இதை அடுத்து மத்திய அமைச்சகம் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுத்தமான சுகாதாரமான அன்னதான கூடம் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. நிதிமைச்சர் தியாகராஜன் கோயில் துணை கமிஷனர் அருணாச்சலத்திடம் அதற்கான சான்றிதழை வழங்கினார். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் இதுவரை 26 கோயில்களுக்கு சுகாதார அன்னதான கூடம் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மீனாட்சியம்மன் கோயில் முழு நேர அன்னதான கூடம் என்ற சிறப்பு பெற்றுள்ளது. மேலும் ஐந்து கோயில்களுக்கு அன்னதான கூடம் சான்றிதழ் வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது என்றார்.