பதிவு செய்த நாள்
02
மார்
2023
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வீதி உலா வரும் தேர், 33.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இரும்பு தகடால் மூடும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவின் ஏழாம் நாளில், ஆண்டுதோறும் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகிய தேர்கள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும்.
விழா முடிந்து, பஞ்சமூர்த்திகள் தேர், இரும்பு கூரையால் மூடப்பட்டு பாதுகாப்பாக வைப்பது வழக்கம். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு, உண்ணாமலையம்மன் சமேத அருணசாலேஸ்வரர் வீதி உலா வரும் மஹா ரதத்தை, பைபர் கண்ணாடி கவசம் கொண்டு மூடப்பட்டு, ஆண்டு முழுவதும் பக்தர்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. பராசக்தி அம்மன் தேர், வலுவான இரும்பு தகடு பொருத்திய கவசம் மூலம் மூடப்பட்டது. இந்தாண்டு தீப திருவிழா கடந்த டிச., 6ல் முடிந்த நிலையில், மற்ற மூன்று தேர்கள், வெயில், மழையில் பாதிக்காமல், மூடி வைக்கும் பணி நடக்கிறது. இதில், விநாயகர் தேர், 11.90 லட்சம் ரூபாய், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேர், 14.85 லட்சம் ரூபாய், சண்டிகேஸ்வரர் தேர், 7.15 லட்சம் ரூபாய் என மொத்தம், 33.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ‘ட்ரான்ஸ்பரன்ட் சீட்’ என அழைக்கப்படும், தரமான இரும்பு தகரம் கொண்டு மூடும் பணி நடக்கிறது.