இம்மையில் நன்மை தருவார் கோயில் மாசி திருவிழாவில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2023 04:03
மதுரை : இம்மையில் நன்மை தருவார் கோயில் மாசி திருவிழாவின் 5ம் நாளான நேற்று மாலை விடையாத்தி சப்பரத்தில் மத்தியபுரி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.
மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்திபெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலையிலும் சப்பரம், ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 5ம் நாளான நேற்று மாலை விடையாத்தி சப்பரத்தில் மத்தியபுரி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் 6ம் நாளான இன்று (2ம்தேதி) சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை நடக்கிறது. 3ம் தேதி காலை பிக்ஷாடணர் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 4ம்தேதி நடக்கிறது. காலை 8.02 மணி முதல் 8.53 மணிக்குள் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பார்கள். அன்று சனிப்பிரதோஷம் என்பதால் மாலை 3 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை, புஷ்ப வாகனத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா வரு கிறார்கள். 5ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. 10ம் தேதி தீர்த்தவாரி உற்சவம், கொடியிறக்கமும், 11ம் தேதி உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.