பதிவு செய்த நாள்
06
மார்
2023
04:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில், தந்தைக்கு, அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது.
திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு, குழந்தை இல்லாமல், அருணாசலேஸ்வரரிடம் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தபோது, அருணாசலேஸ்வரரே அவருக்கு மகனாக பிறந்ததாக, தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும், மாசி மகத்தன்று வள்ளாள மஹாராஜாவிற்கு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது. இதையொட்டி காலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து மேள தாளங்களுடன் புறப்பட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம துரிஞ்சல் நதிக்கரைக்கு சென்றடைந்தார். அங்கு சூல வடிவிலான அருணாசலேஸ்வரர், துரிஞ்சல் நதியில் மூழ்கி, திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. பின்னர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து சம்மந்தனுார் கிராம மக்கள், அருணாசலேஸ்வரருக்கு சம்மந்தம் கட்டும் நிகழ்வு நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.