பதிவு செய்த நாள்
06
மார்
2023
10:03
சிதம்பரம்: பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது மேலும் மகாருத்ர யாகம் மற்றும் வைபவம் நடந்தன.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும்.இதில் ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது மகாபிஷேகத்தை முன்னிட்டு காலை மகாருத்ரயாகம் மற்றும் வைபவம் நடைபெற்றன. இதில் மகா அபிஷேகத்தை காண்பதற்கு உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம் வெளி மாநிலம், வெளிநாட்டடை சேர்ந்த பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயிலில் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.