பரமக்குடி: பரமக்குடி சக்தி குமரன் கோயிலில் மாசி மகத்தையொட்டி பால்குட விழா நடந்தது.
இக்கோயிலில் மார்ச் 4 காலை 9:00 மணிக்கு செந்தில் ஆண்டவர், ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. அன்று மாலை சண்முகார்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு குருவடியார் இலக்குமணன் தலைமையில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் தலைமை சிவாச்சாரியார் காமேஸ்வர குருக்கள், சங்கரமட ஆஸ்தான ஸ்தபதி நந்தகுமார் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாள் கோயில் முன்பு வைகை ஆற்றில் இருந்து பால் குடங்கள் புறப்படாகின. பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அங்கு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு மலரால் அலங்கரிக்கப்பட்ட தேரில், செந்தில் ஆண்டவர் வீதி வலம் வந்து அருள் பாலித்தார். தொடர்ந்து (மார்ச் 8) நாளை காலை பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி 47 ஆம் ஆண்டு மிதிவண்டி பயணம் செல்கின்றனர்.