பதிவு செய்த நாள்
07
மார்
2023
11:03
பல்லடம்: பல்லடம் அருகே, சித்தம்பலம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா துவங்கியது.
பல்லடம் அடுத்த, சித்தம்பலம் கிராமத்தில், ஸ்ரீமாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் பூச்சாட்டு பொங்கல் விழா பிப்., 28 அன்று அம்மன் அபிஷேக ஆராதனை உடன் துவங்கியது. தொடர்ந்து, முனீஸ்வரன் பூஜை, பொரி சாட்டுதல், முளைப்பாரி இடுதல், கம்பம் நடுதல் உள்ளிட்ட நிகள்வுகள் நடந்தன. மார்ச் 3ம் தேதி முதல், கம்பம் சுற்றி ஆடுதல், பவள கும்மி ஆட்டம், பரதநாட்டிய நிகழ்ச்சி என, தினசரி பல்வேறு நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சியில், இடுவாய் காவடி ஆட்ட குழுவினரின் காவடி ஆட்ட நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் அம்மன் அபிஷேக ஆராதனை நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழா குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மார்ச் 10ம் தேதி வரை நடைபெற உள்ள பொங்கல் விழாவை முன்னிட்டு, தினசரி பல்வேறு கலை மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.