பதிவு செய்த நாள்
10
மார்
2023
08:03
திருவொற்றியூர், திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பிரம்மோற்சவம், பிப்., 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், 4ம் தேதி விமரிசையாக நடந்தது.
விழா நிறைவாக, நேற்று அதிகாலை, தியாகராஜ சுவாமியின் 18 திருநடனம் மற்றும் பந்தம் பறி திருவிழா, வரவு - செலவு கணக்குகள் படிக்கும் வைபவம் நடைபெற்றது. அதன்படி, சிறப்பு மலர் அலங்காரத்தில், தியாகராஜ சுவாமி அதிகாலையில் தொட்டியில் எழுந்தருளினார். உடன், வடிவுடையம்மனும், தனி சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமி மாடவீதி உற்சவம் முடிந்து, அம்மன் சன்னிதி வெளியே, ஒன்பது முறை, ஒய்யாரமாக நடனம் புரிந்தார். கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தியாகேசா ஒற்றீசா என, விண்ணதிர முழங்கினர். இத்துடன் விழா நிறைவடைந்தது.