பதிவு செய்த நாள்
10
மார்
2023
08:03
திருப்பூர்: கிராம கோவில்களுக்கு அறங்காவலர் நியமிப்பது, கையகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என, பா.ஜ., ஆலய மேம்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளில், அந்தந்த பகுதி பொதுமக்கள் கட்டுப்பாட்டில், ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. நீண்ட காலமாக இவை, உள்ளூர் கோவில் கமிட்டி நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்பு மூலம் திருப்பணி, கும்பாபிஷேகம், திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இக்கோவில்களை கையகப்படுத்தும் நோக்கில், அறங்காவலர்கள் என்ற பெயரில் ஆளும்கட்சியினரையும், நாத்திக கொள்கை கொண்ட நபர்களையும் நுழைத்து, வழிபாட்டு முறைகளில் தலையிட்டு சீர்குலைக்கும் வகையில், தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக, பா.ஜ. ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அதன் மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமையில் அப்பிரிவினர், திருப்பூர் கலெக்டர் வினீத் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் செல்வராஜ் ஆகியோரிடம் நேற்று அளித்த மனுவில், கிராம கோவில்கள் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. கோவில் கமிட்டி மற்றும் ஊர் பிரமுகர்களிடம் அனுமதி பெறாமல், கோவில் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கோவில் நிர்வாகத்தின் ஆலோசனை இன்றி, அறங்காவலர் நியமிக்கக் கூடாது என கூறியுள்ளார்.