ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2023 11:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 05:00 மணிக்கு மகா கணபதி அனுக்ஞை பூஜையும், புண்யாஹவாசனம், கும்ப ஆவாஹணம் மற்றும் காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் காலை 06:30 மணிக்குமேல் மாரியம்மன் கோவில் தெருவில் இருந்து நகரில் பல்வேறு வீதிகள் வழியாக கோயிலுக்கு கொடிபட்டம் கொண்டுவரப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்து காலை 8:18 மணிக்கு, கோயில் அர்ச்சகர் சுந்தர் கொடிபட்டம் ஏற்றினார். அப்போது கூடி இருந்த திரளான பக்தர்கள் குலவையிட்டு அம்மனை வணங்கினர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய மாரியம்மனை, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். காலை 10:30 மணிக்குமேல் அம்மன் முக்கிய வீதிகள் சுற்றி மண்டகப்படி எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தினமும் காலையில் அம்மன் மண்டகப்படி எழுந்தருளும், இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணிக்குமேல் கோயில் முன்பு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடக்கிறது. மார்ச் 21 அன்று மதியம் 1:15 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதலும், மார்ச் 22 அன்று மதியம் 11:15 மணிக்குமேல் தேரோட்டமும் நடக்கிறது.