பதிவு செய்த நாள்
12
மார்
2023
11:03
பேரூர்: பேரூரில், தமிழக கோவில்களில், தமிழ்நெறி வழிபாடு குறித்து பொதுமக்களுக்கு கொண்டு செல்ல, கரூரில், வரும், 25ம் தேதி கருந்தரங்கம் நடக்க உள்ளது என, பேரூராதீனம் மருதாச்சல அடிகளார் தெரிவித்தார்.
செந்தமிழ் ஆகம வழிபாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழரின் வழிபாட்டை அனைத்து கோவில்களிலும் கொண்டு சேர்ப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம், பேரூர் திருடமத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமை வகித்தார். இதில், தமிழ்நெறி வழிபாட்டில் ஒருமித்த கருத்துள்ள பல தரப்பினரும் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், நிருபர்களிடம் கூறுகையில்,"தமிழ்நெறி வழிபாடு என்பது தமிழர்களின் மரபு. பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், தமிழ்நெறி வழிபாட்டை தொடர்ந்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களிலும், தமிழ் திருக்குட நன்னீராட்டு விழா நடத்த வேண்டும் என, அடியார்கள், நீதிமன்றத்திற்கு சென்றனர். அதன்படி, கோவில்களில், தமிழ் வழிபாடு செய்வதற்கு, உரிய செயல்முறையை வகுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு இதுகுறித்து கருத்து பெற, குழு அமைத்துள்ளது. இக்குழுவின் நோக்கம், பிற மொழிகளில் வழிபாடுகள் வேண்டுமா, வேண்டாமா என்பதற்காக அல்ல. தமிழ்நெறி வழிபாடு எப்படி எல்லாம் செய்யலாம் என்பதற்காக, தமிழ் வழிபாடு செய்து வருபவர்களிடம் செயல்முறைகள் பெறப்பட்டு வருகிறது.