திருப்புவனம் பூமாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2023 08:03
திருப்புவனம்: திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகா தேவி கோயில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்புவனம் நகரின் காவல் தெய்வமான பூமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பத்து நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறும், இந்த பத்து நாள் திருவிழாவில் திருப்புவனம் நகர மக்கள் எந்த ஊருக்கு சென்றாலும் சொந்த ஊருக்கு வந்து அம்மனை வணங்கி விட்டு செல்வார்கள். சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் நேர்த்தி கடன் விரதமிருக்கும் பக்தர்கள் அம்மனுக்கு அக்னி சட்டி, ஆயிரம் கண்பானை, கால் பாதம், கை பாதம், பொம்மை , ஆயிரம் கண்பானை உள்ளிட்டவைகள் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரவு 9.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடியேற்ற வைபவத்தை கண்ணன் பட்டர், செந்தில் பட்டர் ஆகியோர் நடத்தி வைத்தனர். கொடியேற்றத்திற்கு பின் பக்தர்கள் கொடி மரத்திற்கு 15 அடி முதல் 30 அடி உயர மாலையை அணிவித்து வணங்கினர். .கோயில் கொடிமரம் முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கோயிலுக்கு உள்ளே மட்டுமல்லாது வெளியிலும் பக்தர்கள் ஏராளமாக குவிந்ததால் கோயிலினுள் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டும் கூட்டம் கட்டு கடங்காமல் வந்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர். வரும் செவ்வாய் கிழமை பொங்கல் விழா நடைபெற உள்ளது. பத்து நாட்கள் திருவிழாவில் தினசரி ஏராளமான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து ஊரை வலம் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை தி.புதூர் கிராம தலைவர் வி.பி.சொக்கலிங்கம் மற்றும் கிராம பொதுமக்கள்,பக்தர்கள் செய்து வருகின்றனர்.